‘அரசன்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் ‘அரசன்’. இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆகையால் தான் அக்டோபர் 16-ம் தேதி அனிருத் பிறந்த நாளன்று இதன் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே இது உறுதியாகி இருக்கிறது. எப்படியென்றால், ‘அரசன்’ ப்ரோமோவின் பின்னணி இசைக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இதற்காக பின்னணி இசைக்கு வந்த கலைஞர் ஒருவர் அனிருத் ஸ்டூடியோவில் இருந்து ‘அரசன்’ பின்னணி இசையில் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.
அக்டோபர் 16-ம் தேதி ‘அரசன்’ ப்ரோமோ வெளியாகவுள்ளது. இப்படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு வடசென்னை போலவே போடப்பட்டு வரும் அரங்கிலும் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.