திரையரங்குகள் கிடைப்பதில் சிரமமாக இருப்பதால், ‘அஸ்திரம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
‘கிங்ஸ்டன்’, ‘ஜென்டில்வுமன்’, ‘மர்மர்’, ‘எமகாதகி’, ‘அஸ்திரம்’, ‘நிறம் மாறும் உலகில்’ மற்றும் ‘அம்பி’ என 7 படங்கள் மார்ச் 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதில் சில படங்கள் வெளியீட்டில் இருந்து பின்வாங்கும் என கருதப்பட்டது. தற்போது முதலாவதாக ‘அஸ்திரம்’ படம் வெளியீட்டில் இருந்து பின் வாங்கியிருக்கிறது.
மார்ச் 7-ம் தேதி வெளியீட்டிற்கு விளம்பரப்படுத்தி பல லட்சங்களை செலவழித்துவிட்டது படக்குழு. ஆனாலும், படத்தின் மீது நம்பிக்கை வைத்து வேறொரு தேதியில் வெளியிடலாம் என பின்வாங்கி இருக்கிறார்கள். விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது. திரையரங்குகள் பகிர்வில் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.