‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தி உள்ளார் செல்வராகவன்.
இது தொடர்பாக செல்வராகவன், “’ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான போது, சிலர் செய்த எதிர்மறையான விமர்சனங்கள் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது அவர்களே கொண்டாடுகிறார்கள். ஆனால், இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? நிறைய பணமும், நேரமும் அப்படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அப்படம் வெளியீட்டின் போது திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் இப்போது கொண்டாடினாலும் எனக்கு அதில் மகிழ்ச்சியில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எழுதி வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 2010-ம் ஆண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு தோல்வியை தழுவியது. இப்போது அதன் காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றை இணையவாசிகள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

