‘ஆர்யன்’ மூலம் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்திருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது, “கரைம் படம் என்றாலே கண்டிப்பாக அனைவரும் ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள். அதை தடுக்க இயலாது. இது அனைத்து மொழி த்ரில்லர் படங்களுக்கும் பொருந்தும். நானே ‘ராட்சசன்’ படத்தை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ மூலம் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்திருக்கிறோம்.
கரோனா காலத்தில் ஆரம்பித்த படம். ஐந்து ஆண்டுகளாக இப்படத்துக்கு இயக்குநர் பிரவீன் உழைத்திருக்கிறார். இதன் இந்திப் பதிப்பில் அமீர்கான் சார் நடிப்பதாக இருந்தது. அவரே இக்கதையினைக் கேட்டு பாராட்டியது மிகவும் உற்சாகத்தை அளித்தது. ஆனால், தமிழிலேயே இப்படத்தினை உருவாக்கலாம் என முடிவு செய்தேன். இப்போது பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. மண் சார்ந்த படங்கள் தான் இப்போது பான் இந்திய படங்களாக மாறியிருக்கிறது. ஆகையால் தமிழ் ரசிகர்களுக்கு எடுக்கலாம் என இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம்.
இதில் ஒரு புதிய விஷயத்தை முயற்சி செய்திருக்கிறோம். நீங்கள் தரும் பாராட்டுகள் தான் என்னை புது விஷயங்கள் செய்வதற்கு ஊக்கமாக இருக்கிறது. இப்படத்தினை பொறுத்தவரை செல்வராகவன் சார் தான் ஹைலைட். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக இருப்பதற்கு, அவரது உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததிற்கு நன்றி. எனது மகன் பெயர் ஆர்யன். அவனது பெயரில் நல்ல படம் எடுத்திருப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார் விஷ்ணு விஷால்.

