‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன்பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
சமூகத்தில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இல்லாததால் விரக்தியடையும் எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), ஒரு முன்னணி தொலைகாட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடக்கும் ஒரு விவாத நிகழ்ச்சியை ஹைஜாக் செய்கிறார். நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஒரு இளம் நடிகரை துப்பாக்கியால் சுடுகிறார். தான் எழுதிய கதையின்படி அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகளை தான் செய்ய இருப்பதாகவும், அதில் ஒரு கொலை இப்போதே இந்த அரங்கிலேயே நடக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
கொலையாளியே இறந்துவிட்ட பிறகு மீதமுள்ள கொலைகள் எப்படி நடக்கும் என்று போலீஸார் தலையை பிய்த்துக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் தனது திருமண வாழ்க்கையில் இக்கட்டான சூழலில் இருக்கும் போலீஸ் அதிகாரியான நம்பியிடம் (விஷ்ணு விஷால்) இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அழகர் சொன்னது போல அந்த கொலைகள் நடந்ததா? ஹீரோவின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த வழக்கு என்ன ஆனது? அழகரின் நோக்கம்தான் என்ன என்பதே ‘ஆர்யன்’ படத்தின் திரைக்கதை.
சீரியல் கில்லர் / சைக்கோ த்ரில்லர் படங்கள் என்றதுமே காலம் காலமாக ஒரே போன்ற கதைகளை எடுத்துத் தள்ளும் சூழலில் ஒன்லைனராகவே ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்த இயக்குநர் பிரவீனை பாராட்டலாம். படம் தொடங்கி செல்வராகவனின் அறிமுகமானதுமே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது. அவர் டிவி ஸ்டுடியோவுக்குள் நுழையும் காட்சி தொடங்கி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் வரையிலான காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் புத்திசாலித்தனமான ஐடியா. இவை முழு படத்தின் மீதும் பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் திரைக்கதை தடுமாறுவது ஒரு முக்கிய மைனஸ்.
காரணம், ஓர் அட்டகாசமான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் படம் விஷ்ணு விஷாலின் அறிமுகம், அவரது குடும்பப் பின்னணி, தேவையே இல்லாமல் நாயகன், நாயகி காதல் வாழ்க்கையை விளக்கம் ஒரு பாடல் என முந்தைய விறுவிறுப்பை அடுத்தடுத்த காட்சிகளே அமுக்கி விடும் உணர்வு ஏற்படுகிறது. எனினும், ஒவ்வொரு கொலை நடப்பதும், அதற்கு முன்பு செல்வராகவன் தோன்றும் இடங்களும் மீண்டும் விட்டதை பிடிக்கும் வகையில் சுவாரஸ்யமாகவே செல்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதி படத்தின் ஜானருக்கு நியாயம் செய்யும் வகையில் ‘த்ரில்’ அனுபவங்களுக்கு உத்தரவாதம் தருகிறது.

ஹீரோவாக விஷ்ணு விஷால். கிட்டத்தட்ட படம் தொடங்கி அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் அவருடைய அறிமுகமே வருகிறது. குடும்ப வாழ்வில் தடுமாறும் கணவனாகவும், நூல்பிடித்து கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாகவும் நேர்த்தியான பணியை செய்திருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரமும் அது எழுதப்பட்ட விதமும் படத்துக்கு பலம். காரணம் முதல் காட்சியிலேயே இறந்து போனாலும், படம் முழுக்க அவருடைய தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்படி எழுதிய விதம் சிறப்பு. ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு கனமான கதாபாத்திரம். எனினும் அவருடைய டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். மானசா சவுத்ரிக்கு பெரிதாக வேலையில்லை.
டெக்னிக்கல் அம்சங்கள் படத்துக்கு மற்றொரு பெரும் பலம். குறிப்பாக கிருஷ்ணன் வெங்கடேஷின் ஒளிப்பதிவு.முதல் காட்சியிலேயே ஒரு க்ரைம் த்ரில்லருக்கான மனநிலையை செட் செய்து விடுகிறார். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. செல்வராகவன் பேசும் வசனங்கள் அப்ளாஸ் பெறுகின்றன.
படத்தில் கொலைகளுக்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை. அந்த ஐடியாவே விபரீதமானதாக தோன்றுகிறது. சில இடங்களில் ஹாலிவுட்டில் வெளியான ‘செவன்’ படத்தின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதேநேரம் ‘ரமணா’ பாணியில் சில இடங்களில் முயற்சிருப்பது எல்லாம் பெரிதாக கைகொடுக்கவில்லை. விஷ்ணு விஷாலின் துப்பறியும் காட்சிகளில் க்ரைம் த்ரில்லர்களில் இருக்கவேண்டிய புத்திசாலித்தன காட்சிகள் மிஸ்ஸிங்.
கதையாக ஒரு நல்ல த்ரில்லர் களத்துக்கான ஒன்லைனரை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதனை திரையில் கொண்டு வருவதில் ஓரளவு மட்டுமே வெற்றிபெற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. லாஜிக் மீறல்களையும், ஆங்காங்கே வரும் இழுவைகளையும் சரிசெய்திருந்தால் இன்னொரு ‘ராட்சசன்’ ஆக வந்திருக்கும் இந்த ‘ஆர்யன்’.

