தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது.
2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.13 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
இதன் இந்தி ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டன. பல்வேறு முன்னணி நாயகிகள் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. முதலில் தீபிகா படுகோன், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். இறுதியாக இப்போது தான் இந்தி ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘அருந்ததி’ இந்தி ரீமேக்கினை மோகன் ராஜா இயக்கவுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தி படமாக ‘அருந்ததி’ ரீமேக் சரியாக இருக்கும் என முடிவு செய்திருக்கிறார்.
‘அருந்ததி’ இந்தி ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

