மும்பை: இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை அட்லி உருவாக்கி வருகிறார் என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
’சிங் தேசி சைனிஸ்’என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி உருவாக்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லி, பாபி தியோல், ரன்வீர் சிங் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதில் ரன்வீர் சிங் பேசும் போது, “’ஜவான்’ படத்தின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநராக அட்லி மாறுவதற்கு முன்பு, ‘மெர்சல்’ படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு நீண்ட மெசேஜ் அனுப்பியிருந்தேன். இது பலருக்கும் தெரியாது. அவரிடம் “சார். உங்களது சினிமா ரொம்ப பிடிக்கும். நீங்கள் மும்பைக்கு வாருங்கள். நாம் சேர்ந்து சில படங்கள் பண்ண வேண்டும்” என்று சொன்னேன். அட்லி சாருடன் இணைந்து பணிபுரிய எனக்கு எப்போதுமே ஆசை தான்.
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்த நண்பராக இருக்கிறார். அவருடன் நேரம் செலவழிப்பது எப்போதுமே அருமையாக இருக்கும். இப்போது என் மனைவி தீபிகா, அட்லி சாருடைய படத்தில் தான் நடித்து வருகிறார். ஆகையால் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு அடிக்கடி செல்வேன். இப்போது நான் சொல்வதை முன்பே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், எனது வார்த்தைகளில் சொல்ல வேண்டும். இந்திய சினிமா இதுவரை பார்க்காத, அனுபவித்திராத விஷயத்தை அட்லி உருவாக்கி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.