சமூக வலைதளத்தில் பிரபலமான ஷாலின் ஜோயா இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் ஷாலின் ஜோயா. தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தினை ஆர்.கே. இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிராமத்து பின்னணியில் 1990-களில் நடக்கும் நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி கதையாகும். இதில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியும், கவுரவ கதாபாத்திரத்தில் அஸ்வினும் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை பிரபல மலையாள நடிகை மற்றும் இயக்குநரும், தமிழில் ‘கண்ணகி’ படத்தில் நடித்தவரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஷாலின் ஜோயா இயக்குகிறார். மலையாளத்தில் ஷாலின் ஜோயா இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்த நிலையில் ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 18வது தயாரிப்பின் மூலம் தமிழில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இப்படம் குறித்து ஷாலின் ஜோயா கூறுகையில், “90களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக்கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்ல உள்ளோம். இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. திறமையான கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

