இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால் தாக்கிக் கொண்டது சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது. அதை விட கொடுமை, இந்த மூன்றாவது வார இறுதியில் விஜய் சேதுபதி அவற்றை மேம்போக்காக கையாண்டதுதான்.
திவாகருக்கும், கானா வினோத்துக்கு இடையிலான ‘செல்லமான’ வாக்குவாதங்களும், சின்ன சின்ன சண்டைகளையும் அப்படியே விட்டிருந்தால் இயல்பாக இருந்திருக்கும். அதைக் குறிப்பிட்டு போன வார இறுதியில் பேசிய விஜய் சேதுபதி வெளியே உங்களுடைய நட்பு பயங்கர வைரல் என்று போட்டு உடைத்தது வினையாகிவிட்டது. வேண்டுமென்றே திவாகரை வினோத் சீண்டிக் கொண்டிருப்பது ஓவர் டோஸ் ஆகி ஒருகட்டத்துக்கு மேல் திவாகரைப் போலவே நமக்கும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது.
மற்றதெல்லாம் கூட ஓகே. ஆனால் திவாகருடைய உருவத்தை வைத்தும், அவருடைய நடையை வைத்தும் கிண்டல் செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதிலும் வினோத்துடன் கம்ருதீனும் சேர்ந்துகொண்டு செய்ததெல்லாம் அநாகரிகத்தின் உச்சம். ‘மரத்துக்கு சேலை கட்டுவது’, ‘பொம்பள பொறுக்கி’ போன்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் இதுவரை எந்த சீசனிலும் கேட்காதது.
இன்னொரு பக்கம் ஜூஸ் கடை டாஸ்க்கின்போது, எப்போதும் திவாகருடனே இருக்கும் பார்வதியும் கூட திவாகரை சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் மோசமாக பேசினார். மற்றவர்களிடம் எகிறினாலும் பார்வதி விஷயத்தில் அடக்கி வாசிக்கும் திவாகரே ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்துவிட்டார்.
இதில் திவாகரும் சளைத்தவரில்லை. யாருடன் சண்டை போட்டாலும் திரும்ப திரும்ப ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை’, ‘என்னுடைய பேக்கிரவுண்ட் தெரியுமா?’ என்றெல்லாம் வார்த்தைகளை விடுகிறார். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். கம்ரூதீனை வளர்ந்த விதம் குறித்தெல்லாம் பேசுகிறார்.
இது ஒருபுறமென்றால், அதே வார்த்தையை கம்ருதீனும் வாயில்லா பூச்சியான துஷாரிடம் பிரயோகித்தார். அதுவும் வார இறுதியில் விஜய் சேதுபதி இருக்கும்போதே. இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முதல் வாரம் ஆதிரை எழுந்து நிற்கவில்லை என்பதற்காக அவரை ’வைத்துச் செய்த’ விஜய் சேதுபதி, இந்த வாரம் இந்த டாபிக்கை வைத்து சரவெடியாய் வெடிப்பார் என்று பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு புஸ்வானம் ஆகிவிட்டது.
போட்டியாளர்களிடம் நேரடியாக இந்த வாரம் நீங்கள் நடந்து கொண்ட விதம் மோசம் என்று கூறிய அவர், அவர்களின் வார்த்தை பிரயோகங்களை கேள்வி கேட்காமல் விட்டது ஏமாற்றம். குறிப்பாக ‘பேக்கிரவுண்ட் தெரியுமா?’, ‘வளர்ப்பு’ குறித்தெல்லாம் பேசியதையாவது அவர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்த சீசனுக்கு இதுவே போதும் என்று இருந்துவிட்டாரா என்று தெரியவில்லை. முந்தைய ஒரு சீசனில் வளர்ப்பு குறித்து ஒரு போட்டியாளர் பேசியதை கமல் கடுமையாக கண்டித்ததையும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.
குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்கமுடியவில்லை என்று ஆடியன்ஸ் கூறியதை போட்டியாளர்களிடம் மேற்கோள் காட்டிப் பேசிய விஜய் சேதுபதி, அநாகரிகமான வார்த்தைகளை தவிர்க்குமாறு அவர்களுக்கு கொஞ்சம் அறிவுறுத்தியிருக்கலாம்.

