கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இவரது அணி பெல்ஜியம், துபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்று வெற்றி பெற்றது. தற்போது ‘24ஹெச்’ என்ற ரேஸில் அஜித் அணி கலந்து கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் ‘எஃப்1’ படத்தில் பிராட் பிட் நடித்தது போல் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படங்களில் உங்களை காண முடியுமா என்ற கேள்விக்கு, “ஏன் முடியாது? நான் நடிக்கும் படங்களின் சண்டைக் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படியான வாய்ப்புகள் வரும்போது ஏன் நடிக்க மாட்டேன் என கூறப் போகிறேன். ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘எஃப் 1’ படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று பதிலளித்துள்ளார் அஜித்.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.