பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்து பேசியிருக்கிறார் சல்மான்கான்.
இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார் சல்மான்கான். இது தொடர்பாக சல்மான்கான், “சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது.
அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அது பிரச்சினைகளை உருவாக்கியதாக கூறியிருக்கிறார். அந்தச் சமயத்தில் என் விலா எலும்பு உடைந்திருந்தது. சமீபத்தில் அந்த இயக்குநரின் மற்றொரு படம் வெளியானது. அதன் நடிகர் 6 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். அந்தப் படத்தின் பெயர் ‘மதராஸி’. இது ‘சிக்கந்தர்’ படத்தை விட பெரிய அல்ல மிகப் பெரிய பிளாக்பஸ்டர்” என்று கிண்டல் தொனியில் சிரித்துக் கொண்டே பேசியிருக்கிறார் சல்மான்கான்.
முன்னதாக ‘மதராஸி’ படத்தினை விளம்பரப்படுத்தும் போது ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியளித்தார். அதில் ‘சிக்கந்தர்’ தோல்விக்கு அனைத்துமே இரவு நேர படப்பிடிப்பு, நடிகரும் தளத்துக்கு தாமதமாக தான் வருவார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அனைத்துமே க்ரீன் மேட்டிலேயே படமாக்க வேண்டியது இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி வைரலானது. இதனை முன்வைத்து ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்து பேசியிருக்கிறார் சல்மான்கான்.