கன்னி: வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா என்ற கவலை வேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில், கவனத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் போதும். மற்றபடி யாருக்காகவும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வங்கி லோன் தொடர்பாக யாருக்கும் பரிந்துரை கையொப்பம் போடவேண்டாம்.
வெளியிடங்களில், சமூக அமைப்புகளில் பதவிகள் தேடி வந்தால், யோசித்து செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் செய்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். ஆன்மிக விஷ யங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தை தவிர்த்து விடுங்கள்.
குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்கு சாதகமாகும். பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சேவகாதிபதியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். புதிதாக அறிமுகமானாவர்களை நம்ப வேண்டாம். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உயரும். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கும். எதிர்ப்புகள் அடங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமுண்டு.
உங்களுடைய சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் தாயா, தாரமா என்று சின்ன சின்ன போராட்டங்கள் இருக்கும். கடனை நினைத்து வருந்துவீர்கள். ஆனால் வருமானமும் உண்டு. கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறாதீர்கள். குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பார். கவலை வேண்டாம்.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். எதார்த்தமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். சிலர், கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் கூட்டுத்தொழிலில் திடீர் லாபம் அடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு இருக்கும். சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களை அரவணைத்துப் போகவும். கணினிதுறையினர் மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூற வேண்டாம். கலைஞர்கள் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.
இந்த குரு பெயர்ச்சி நிதானித்து செயல்பட வைத்து வெற்றி காண வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |