கன்னி: முயற்சியை முதுகெலும்பாக கொண்ட நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். பேச்சில் காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களும், சண்டை சச்சரவுகளும் வந்துபோகும். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை அலைந்து திரிந்து போராடித்தான் முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவர்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க வேண்டி வரும். வீட்டு பொருளாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுக – சப்தமாதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் வீட்டை புதுப்பிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் விலகும். திருமணமாகாத சிலருக்கு திருமணம் கூடி வரும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் பூர்வ புண்ய – சஷ்டமாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். வீடு,மனை வாங்குவீர்கள். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். கவுரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.
இல்லத்தரசிகளே! கணவரின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். சக ஊழியர்களை விமர்சித்து பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். மாணவ-மாணவிகளே! தீய நண்பர்களின் பழக்கத்தை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகளே, கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி – பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும்.
உத்தியோகஸ்தர்களே. முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.
இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவால் பிரச்சினைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். தொழுநோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |