இணையத்தில் வைரலான ‘காந்தாரா சாப்டர் 1’ போஸ்டர் தொடர்பாக ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார்.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் நேற்று அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இது இணையத்தில் கொண்டாடப்படுகிறது. இதனிடையே, இப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை உண்டாக்கியது. இது தொடர்பாக ‘காந்தாரா: சாப்டர் 1’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ரிஷப் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரிஷப் ஷெட்டி, “உணவு என்பது அனைவருடைய விருப்பம் சார்ந்தது. அதில் இப்படிதான் இருக்க வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவருவதில் யாருக்குமே உரிமை இல்லை. அந்த போஸ்டர் யாரோ போலியாக உருவாக்கி இருக்கிறார்கள். எங்களுடைய கவனத்துக்கு வந்தபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இப்படம் பலராலும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. அதன் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலருடைய வேலையாக இருக்கும். அந்தப் போஸ்டருக்கும் படக்குழுவுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை” என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் அப்போஸ்டர் படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
முன்னதாக, இணையத்தில் வைரலான போஸ்டரில், காந்தாரா சங்கல்பம் என்பது ஒரு சுய முன்னெடுப்பு என்றும், அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் மூன்று தெய்வீக செயல்முறைகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த மூன்று தெய்வீக செயல்முறைகள்: மது அருந்தக் கூடாது, புகைப் பிடிக்கக் கூடாது அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது. திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் வரை இந்த மூன்று காரியங்களையும் செய்யக் கூடாது என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயல்முறையில் பங்கேற்று அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு கூகுள் படிவமும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.