’கில்லர்’ படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதனை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது.
தற்போது ‘கில்லர்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழில் எஸ்.ஜே.சூர்யா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்து ‘நியூ’ மற்றும் ‘அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக இருக்கிறது. இதற்காகவே பிரம்மாண்ட ஸ்போட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.