குரு என்பவர் நம் அறியாமை இருளை விலக்கி, ஒளியின் வழியைக் காட்டுபவர். குருநாதரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகுதான் நமக்கு நிம்மதியாக உள்ளது. பள்ளியில், பல்கலைக்கழகத்தில் நாம் படித்துபோது, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபோது, நம் அறிவுக்கு எட்டாத பல சம்பவங்கள் நடந்தபோது, நாம் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போயிருப்போம். அந்த நேரத்தில் நமக்கு ஒரு வழிகாட்டியாக, நல் ஆலோசனை வழங்கக் கூடிய வகையில் யார் இருந்தார்களோ அவர்களை நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்போம்.
சனிப்பெயர்ச்சி, ராகு – கேதுப் பெயர்ச்சி ராசிபலன்களை ஒருவித பயத்தோடு படிக்கும் நாம், குருப் பெயர்ச்சி பலனை படிக்கும்போது மட்டும் நமக்கு நல்லதுதான் நடக்கும், குரு பகவான் நமக்கு நல்லது தான் செய்வார், நம்மை அவர் கஷ்டப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையுடன் படிக்கிறோம். சுயநலம் இல்லாமல், சொத்துகளுக்கு விருப்பப்படாமல், குறுக்கு வழியில் சம்பாதிக் காமல், பிறர் மனதைப் புண்படுத்தாமல், உண்மையைப் பேசி, சாத்வீகமாக வாழ்ப வர்கள் அனைவரும் குருவின் அம்சமாகப் பிறந்தவர்கள் ஆவர்.| முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
குரு பெயர்ச்சி: வரும் 14.05.2025 புதன்கிழமை, இரவு 11 மணி 20 நிமிடத்தில் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். நிகழும் விசுவாவசு வருடம், சித்திரை மாதம் 31-ம் தேதி கிருஷ்ண பட்ச துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம், சிவம் நாமயோகத்தில், கரசை நாமகரணத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் குரு பகவான் குடி பெயர்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக ஸ்திர வீடான சுக்கிரனின் ரிஷப ராசியில் அமர்ந்து சில படிப்பினைகளை சொல்லிக் கொடுத்த குரு பகவான், இப்போது உபய வீடான புதனின் மிதுன ராசியில் 14.05.2025 முதல் 1.06.2026 வரை அமர்ந்து அரசாட்சி செய்வார். வேதம், தத்துவம், அரசியல், பணம், பதவி, சட்டம், சம்பிரதாயங்களுக்கு உரிய கிரகமான குரு பகவான் படிப்பு, பாட சாலை, வகுப்பு, பாடத் திட்டம், தேர்வு முறை மற்றும் மாணவச் செல்வங்களுக்குரிய கிரகமான புதனின் வீட்டில் அமர்வதால் கல்வியில் பல மாற்றங்கள் வரும். முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
மிதுன ராசியில் குரு அமர்வதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வளர்ச்சி அடையும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் அதிகரிப்பர். தொலைத்தொடர்பு சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும். துணைத் தொடர்பு துறை வலுவடையும். 5ஜி இன்டர்நெட் கனெக்ஷன் சோஷியல் மீடியா, அச்சுத்துறை வளர்ச்சி அடையும். ஆசிரியர், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், அந்தரங்க உதவியாளர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும். செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாட்டில் அதிகமாகும். இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும். இரட்டையர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இரண்டு இரண்டாக இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே இந்த குரு பெயர்ச்சியால் விருத்தியடையும். தங்கத்தின் விலை உயர்ந்து பிறகு கட்டுப்பாட்டுக்கு வரும், என்றாலும் எல்லா ஆபரணங்களுடைய விலை படிப்படியாக உயரும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள், மாணிக்கம், முத்து, பவளம், வைரம் உள்ளிட்ட ரத்தினங்களின் விலையும் அதிகரிக்கும். | முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
காட்டு ராசியாகிய மிதுன ராசியில் குரு பகவான் அமர்வதால் புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். புது விமான சேவைகளும், புது நிறுவனங்களும் களத்தில் உதிக்கும். அதேபோல பயணம் செய்பவர்கள் அதிகரிப்பர். ஸ்டார்ட்டப் நிறுவனங்கள், புது நிறுவனங்கள் அதிகமாகும். புதிதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ராணுவத்தை பலப்படுத்த புது ராணுவ வீரர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பல நாடுகளுடன் புது ஒப்பந்தங்களை இந்தியா செய்து கொள்ளும். பேச்சுவார்த்தைக்கு உரிய கிரகமாகிய புதனின் வீட்டிலேயே குரு பகவான் அமர்வதால் பேச்சுவார்த்தை மூலமாக நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் முடிவுக்கு வரும். சமாதானம் தழைக்கும். பச்சைக்கிளி, மயில் ஆகிய பறவைகள் அதிகரிக்கும். அவற்றை பாதுகாக்க பொது சட்டங்கள் வரும். அழகு நிலையங்கள் அதிகரிக்கும்.
ஆன்மிகத்திலும் அரசியலிலும் புதிய பேச்சாளர்கள் சாதித்துக் காட்டுவார்கள். அரசியல் மேடையில் இனி அனல் பறக்கும். கைவினைப் பொருட்கள் தொழில் வளர்ச்சி அடையும். டிராவல்ஸ் ஏஜென்சி வைத்திருப்பவர்கள் அதிக வருமானம் ஈட்டுவர். ஆன்லைன் பிசினஸ் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். கைத்தொழில் செய்பவர்கள் குறிப்பாக ஸ்தபதிகள், தங்க நகைகள் செய்பவர்கள் செழிப்படைவர். விளம்பரத் துறை சூடு பிடிக்கும். ரயில்வே துறை விரிவுபடுத்தப்படும். தீவிரவாதிகளால் விமானங்கள் கடத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குருபகவான் ஐந்தாவது பார்வையாக துலாம் ராசியை பார்ப்பதால் வியாபாரம் பெருகும். வெள்ளி விலை அதிகரிக்கும்.
திரைப்படத் துறை சூடு பிடிக்கும். சினிமாவில் பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு அதிக வருமானம் வரும். தனிப்பட்ட வகையில் கச்சேரிகள் அதிகமாக நடத்துவார்கள். பரதநாட்டியம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் செழிப்படையும். வளர்ச்சி அடையும் கலைத்துறையை சார்ந்தவர்கள் அரசியலில் சாதித்துக் காட்டுவார்கள். பெரிய விருதுகள் கெளரவங்கள் அவர்களுக்கு கிடைக்கும். நீதித்துறை விரிவடையும். பொது நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். பழைய நீதிமன்றங்கள் அலுவலகங்கள் புதுப்பிக்கப்படும். புது நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். நீதிபதிகளுக்கும் கௌரவ விருதுகள் கிடைக்கும். முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
வாசனை திரவியங்கள் அதிக விற்பனையாகும். கல்யாண தரகர்கள் அதிகம் சம்பாதிப்பார்கள். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். குருபகவான் ஏழாவது பார்வையாக தனுசு ராசியை பார்ப்பதால் கோயில், ஆன்மிகம் தழைக்கும். பழமையான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நிகழும். குரு பரம்பரையை சார்ந்தவர்கள் மதிக்கப்படுவார்கள். ஆதினப் பதவி வகிப்பவர்களுக்கு கெளரவம் கூடும். தத்துவஞானிகள் பிறப்பார்கள். கப்பல், வானவூர்தி பயன்பாடு அதிகரிக்கும். வங்கி மற்றும் நிதி துறையில் பணிபுரிபவர்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும். அதிகம் சம்பாதிப்பார்கள். வேதம், புரோகிதம் தொழில் வளர்ச்சி அடையும். சாஸ்திர சம்பிரதாயங்கள், மந்திரங்கள் ஜெபித்தல் அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றை அதிகமானவர்கள் கற்றுக் கொள்வார்கள். மந்திரிகளின் அதிகாரம் பெருகும்.
ஒன்பதாவது பார்வையாக கும்ப ராசியை குருபகவான் பார்ப்பதால் குளம், கிணறு, ஓடை, நதிகள் இவற்றை பாதுகாக்க புது சட்டங்கள் வரும். மலைப்பகுதியில் யானை பாதையை தடுத்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும். தீவிரவாதிகள் வலுவடைவார்கள். புதிய நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும். இரும்புத்தாதுகள் புதிதாக கண்டறியப்படும். அணு ஆயுதங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அணு உலைகளுக்கு ஆபத்து இருக்கிறது. மண்சரிவு ஒரு பக்கம் இருக்கும். மின்சாரத் திருட்டுகள் கண்டுபிடிக்கப்படும். ஆக மொத்தம் மிதுனத்தில் அமரும் குருபகவான் மக்களிடையே பேச்சுத் திறமையையும், எதிர்த்து கேள்வி கேட்கும் சிந்தனையையும் அதிகரிக்க வைப்பார். மக்களிடையே விழிப்புணர்வும், சகோதர ஒற்றுமையும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை புரிந்து கொள்ளும் யோகமும் அதிகரிக்கும் | அனைத்து ராசிகளுக்கான முழுமையான பலன்களுக்கு > மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |