சென்னை: ‘கூலி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று ஆமீர்கான் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் ஆமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வசூல் செய்தாலும் கூட சமூக வலைதளங்களில் ட்ரோல்களுக்கு ஆளானது. குறிப்பாக ரோலக்ஸ் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆமீர்கானின் கேமியோ கடும் கிண்டலுக்கு உள்ளானது.
இந்த நிலையில் அண்மையில் ஆமீர்கான் பேசியதாக ஒரு பத்திரிகை செய்தி இணையத்தில் வைரலானது. அதில், “ரஜினி சாருக்காக ‘கூலி’ படத்தில் நான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். உண்மையைச் சொல்லப் போனால், என் கதாபாத்திரம் என்ன செய்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அப்படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு” என்று ஆமீர்கான் கூறியதாக இடம்பெற்றிருந்தது.
ஆனால் தற்போது ஆமீர்கான் அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆமீர்கானின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, “ஆமிர் கான் அப்படிப்பட்ட எந்த நேர்காணலையும் வழங்கவில்லை. மேலும் ‘கூலி’ படம் குறித்து எந்த எதிர்மறையான கருத்துகளையும் அவர் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த், லோகேஷ் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினர் மீதும் ஆமீர்கான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.