வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘கூலி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது வெளியாகி இருக்கிறது.
ஒரு படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகிவிடும். அதன் வெளிநாட்டு தணிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது அதிலிருந்து உள்ள தகவலை வைத்து கதைக்களம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த வரிசையில் ’கூலி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
“பரபரப்பான தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம், தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி பேசுகிறது.
ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான கதைசொல்லல் உடன் ஸ்டைலிஷ் ஆன ஆக்ஷன் காட்சிகளும், அதிரடியான மாஸ் தருணங்களும் இடம்பெற்றுள்ளன.” என்பதே ‘கூலி’ படத்தின் கதைக்களமாகும்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.