ஆக்ஷன், எமோஷன், பதற்றம், ஆக்ரோஷம் போன்றவற்றில், பாதி நடிப்பை மட்டுமே சரண்டர் செய்கிறார் தர்ஷன். அடக்க முடியாத கோபம், ஆற்றாமையில் உடைந்தழும் தருணம் போன்றவற்றில் தன் அனுபவ நடிப்பைக் காட்டி, எமோஷனல் ஏரியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார் லால்.
ஆங்காரம் கொண்ட வில்லனாக சுஜித், தேவையான வெறுப்பைச் சம்பாதிக்கிறார். தன் நுணுக்கமான முகபாவங்களாலும் உடல்மொழியாலும் டெம்ப்ளேட் வில்லன் வகையறாவிலிருந்து சுஜித் தனித்துத் தெரிகிறார்.
வில்லன் தம்பியாக கௌசிக், காவல்துறை அதிகாரிகளாக அருள், ரம்யா ராமகிருஷ்ணன், ரவுடியாக சுந்தரேஸ்வரன், பாவப்பட்ட பெண்ணாக செம்மலர் அன்னம், காமெடிக்கு முனீஸ்காந்த் எனப் பலரில் நடிப்பு பலம் சேர்கிறது.

இரவு நேரக் காட்சிகளில் த்ரில்லருக்கான ஒளியுணர்வைக் கடத்துவதோடு, பரபர காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.
விறுவிறுப்பான காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் கச்சிதமான கட்களால் நேர்த்தியாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் ரேணு கோபால், வழித்தவறியோடும் இரண்டாம் பாதியில் பேரிகேடைப் போடத் தவறுகிறார்.