தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய இரண்டாவது சிம்பொனி இசைக்கோர்வையை உருவாக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். அம்மாவின் நினைவு தினத்திற்காகச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த இனிய தீபாவளி நாளிலே உங்களுக்கெல்லாம் இன்னொரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.
Happy Deepavali everyone! pic.twitter.com/uXpJH1hMbq
— Ilaiyaraaja (@ilaiyaraaja) October 20, 2025
எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு தீபாவளி மற்றும் அம்மாவின் நினைவு தினத்தை முடித்துவிட்டு வந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
அத்துடன் புதிய படைப்பாக, சிம்பனிக் டான்சஸ் என்ற ஒரு புதிய இசை கோவையையும் எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளியின் நற்செய்தியாக நான் சொல்கிறேன்” எனப் பேசினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் 8ம் தேதி இளையராஜா Valiant என்ற தனது முதல் சிம்பொனியை லண்டனில் சிறப்புமிக்க அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றினார்.

83 வயதில் புதிதினும் புதிதாக படைப்புகளை உருவாக்கி உலகின் கவனத்தைப் பெற்று வருகிறார் இசைஞானி. கடந்த மாதம் இவர் திரைத்துறையில் 50 ஆண்டுகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.