சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிரஞ்சீவி. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்தியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இது தெலுங்கு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக ‘ஹிட் 3’ படத்தில் நானியுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்தி. தற்போது சிரஞ்சீவி படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பெரும் தொகையை கே.வி.என் நிறுவனம் சம்பளமாக பேசி வருகிறது.
சிரஞ்சீவி – கார்த்தி இருவரும் இணைந்து நடித்தால் தமிழ் – தெலுங்கு இருமொழிகளிலும் பெரும் விலைக்கு வியாபாரம் செய்துவிடலாம் என்பது தான் காரணம்.

