மாதவன் நடித்து வரும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ‘ஜி.டி.என்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் மாதவன் இருப்பதால், இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
‘ஜி.டி.என்’ படத்தினை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி வருகிறார். ‘ராக்கெட்ரி’ படத்தினை தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணிபுரிந்து வருகிறார்.
இந்தியா மட்டுமன்றி ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக பல வருடங்களாக முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது படக்குழு. மேலும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

