கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையை மையமாக வைத்து உருவான படம் ‘ஞான சவுந்தரி’. அரசன் தர்மரின் மகள் ஞான சவுந்தரி. அவரை கொடுமைப்படுத்துகிறார், அவரது சிற்றன்னை. ஒரு கட்டத்தில் தனது ஆட்களை அனுப்பி, ஞான சவுந்தரியைக் காட்டுக்குக் கடத்திச் சென்று கொன்றுவிடுமாறு கூறுகிறார். அவர்கள், ஞான சவுந்தரியின் இரு கைகளையும் வெட்டி விட்டுத் தப்பிக்கின்றனர். உயிருக்குப் போராடும் அவரை, வேட்டைக்கு வரும் பக்கத்து நாட்டு இளவரசன் பிலேந்திரன் காப்பாற்றுகிறான். பிறகு அவரை திருமணம் செய்துகொள்கிறான். இயேசு கிறிஸ்து மற்றும் கன்னி மேரியின் ஆசீர்வாதங்களுடன் அவர்கள் எப்படி மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கதை செல்லும்.
நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப் பட்டது. இதே கதையைத் தழுவி ஏ.நாராயணன் 1935-ம் ஆண்டு, ‘ஞான சவுந்தரி’ என்ற பெயரில் படமாக இயக்கினார். அதில் பி.எஸ். ஸ்ரீனிவாச ராவ் கதாநாயகனாகவும் சரோஜினி நாயகியாகவும் நடித்தனர். அதே கதையைக் கொண்டு 13 வருடங்களுக்கு பிறகு உருவான இந்த ‘ஞான சவுந்தரி’யில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, டி.பாலசுப்பிரமணியம், பி.ஆர்.மங்கலம், பி.எஸ்.சிவபாக்யம், பி.ஜி.வெங்கடேசன் என பலர் நடித்தனர்.
எஃப். நாகூர், ஜோசப் தளியத் ஜுனியர் ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கினர். திரைக்கதையை, டி.என்.ராஜப்பா எழுதினார். ஒளிப்பதிவை ஜித்தின் பானர்ஜி, செல்வராஜ் கவனித்தனர். எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.ஞானமணி இசை அமைத்தனர். கம்பதாசன், பாலசுந்தர கவி, பாபநாசம் சிவன், கே.ஆர்.சாரங்கபாணி, டி.என்.ராஜப்பா, கே.டி.சந்தானம் பாடல்கள் எழுதினர். இதில் ‘அருள் தரும் தேவமாதாவே’ பாடல் சூப்பர் ஹிட்டானது.
முதலில் இதில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பானுமதி. முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்த போது பானுமதிக்கும் இயக்குநர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது பானுமதி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அப்போது கன்னட நடிகையான எம்.வி.ராஜம்மாவை, நாயகியாக நடிக்க வைத்தனர். அதற்கு முன் தமிழில் அவர், ‘உத்தம புத்திரன்’, ‘குமாஸ்தாவின் பெண்’, ‘மதனகாமராஜன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அவர், டி.ஆர்.மகாலிங்கத்தை விட வயதில் மூத்தவர். ஆனால், ஒப்பனைக் கலைஞரின் திறமையால் அவரை இளமையாகக் காட்டியதாகச் சொல்வார்கள். 1948 -ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் அப்போது சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தயாரிக்கப் பட்டபோதே எஸ்.எஸ். வாசனும் இதே கதையைத் தழுவி இன்னொரு படத்தை உருவாக்கினார். பி.கண்ணாம்பா, எம்.கே.ராதா நடித்தனர். 1948-ம் ஆண்டு ஜூனில் வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.