‘டாக்சிக்’ வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வெளியீடு தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
’கே.ஜி.எஃப் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கும் சாத்தியமில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கீத்து மோகன்தாஸ் இயக்கி வரும் இப்படத்தின் காட்சிகளைப் பார்த்திருக்கிறது படக்குழு. இதில் சில காட்சிகள் கமர்ஷியலாக தனக்கு ஏற்றவகையில் இல்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார் யாஷ். இதனால் அக்காட்சிகளை மீண்டும் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே, படத்தின் பொருட்செலவு திட்டமிட்டதை தாண்டி போய்விட்டதால் தயாரிப்பு நிறுவனமும் தயங்கி வருகிறது. இதன் இறுதி முடிவு என்னவென்பது தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். அதற்குப் பிறகே, ‘டாக்சிக்’ வெளியீடு குறித்து திட்டமிடப்படும். தற்போதைய சூழலில் மார்ச் 19-ம் தேதி வெளியீட்டுக்கு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

