தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ‘தேவரா’, ‘வார் 2’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்து ஒரு வெற்றி படம் அவசியம் என்ற நிலையில், ‘டிராகன்’ படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் இதுவரை எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றும் இதனால் ஸ்கிரிப்ட்டில் ஜுனியர் என்டிஆர் சில மாற்றங்களைச் சொன்னதாகவும் அதை பிரசாந்த் நீல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் சமாதானம் செய்துவருவதாகவும் செய்திகள் வெளியானது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஆனால், இதை மறுத்துள்ள ஜூனியர் என்டிஆர் தரப்பு, படத்தின் அடுத்த ஷெட்யூல் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளது.