கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் அப்பா, அம்மா, தம்பி முருகன் (கலையரசன்), மனைவி (ரித்விகா) ஆகியோருடன் வசித்து வருகிறார் சடையன் (தினேஷ்). தற்காலிக வனக்காலவர் பணியிலிருக்கும் முருகன், எப்படியாவது நிரந்தர பணியாளராக ஆக வேண்டுமென்ற கனவோடிருக்கிறார்.
இந்நிலையில், வனத்துறையின் அராஜகங்களை சடையன் தட்டிக்கேட்டதால், தம்பி முருகனின் தற்காலிக பணி பறிபோகிறது. நக்சலைட்டுகளை அழித்தொழிப்பு செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படையில் ஆள்சேர்ப்பு நடப்பதாக அறியும் சடையன், விவசாய நிலத்தை விற்று, அதற்கான பயிற்சிக்கு முருகனை அனுப்புகிறார்.
குடும்பத்தின் வறுமை, அதனால் தடைப்படும் காதல் திருமணம், காத்திருக்கும் காதலி (வின்ஸு சாம்), அண்ணன் சடையனின் நம்பிக்கை எனப் பல கனவுகளோடு, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்கிறார் முருகன்.
அங்கே நடக்கும் சம்பவங்கள், அவரையும், அவரது குடும்பத்தையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதே அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் “தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் கதை.
