தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி – சுக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு -களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.
பலன்கள்: சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே! இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடவேண்டி இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.
வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
மூலம்: உடல் நிலையானது சற்று சோர்வுடன் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியே இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
பூராடம்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணிபுரியும் பெண்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சிறு சிறு விரயங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. உடனிருப்பவர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |