தனுசு: மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். பங்காளிகளுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் ஓரளவு குறையும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சனி ஆட்சிப் பெற்று அமர்வதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள்.
அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளும் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீடு வாங்குவது. கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும்கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, அலைச்சல் வந்து போகும். அடிக்கடி கோபப்படுவீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேறு நிறுவனத்துக்கு வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். யாரையும் பகைத்துக் கொள்ள வேண் டாம்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காவிட்டாலும், மனதுக்குப் பிடித்திருந்தால் ஒத்துக் கொள்ளவும். பழைய இடத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி, புதிய இடத்தில் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் தன – சேவகாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவு, செல்வாக்கு உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும்.போட்டிகளில் வெற்றி உண்டு. உடன் பிறந்தவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். குலதெய்வம் கோயில் கும்பாபிஷேக விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் சப்தம – ஜீவனாதிபதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். உங்களுக்குள் இருக்கும் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டை அறவே தவிர்த்து விடவும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள்.
இல்லத்தரசிகளே! உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதும். புது டிசைனில் தங்க நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! அதிக பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கன்னிப் பெண்களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவி சாயுங்கள். கல்லூரிப் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவ-மாணவிகளே! தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கை கைவிடுங்கள். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படவும்.
வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கத் தான் செய்யும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் எதிர்பாராத லாபம் உண்டாகும். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். கடையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக யோசனை செய்து முடிவெடுக்கவும். புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கவும்.
உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் உங்கள் இருக்கை தேடி வரும். பணி மாற்றம் தொடர்பாக யோசித்து செயல்படவும்.
இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் முன்னேற்றத்தையும், எதிர்பாராத திடீர் யோகங்களையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |