தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. ரசிகர்கள் அவரை பாலய்யா என்று அழைத்து வருகின்றனர். அவர் படங்களில் ரத்தம் தெறிக்கும் ஆக் ஷனுக்கும் அதிரடியான பஞ்ச் வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது. அவர் நடித்து 2021-ல் வெளியான ‘அகண்டா’, சூப்பர் ஹிட் வெற்றியைத் தெலுங்கில் பெற்றது. போயபட்டி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகிஉள்ளது. ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், பால கிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. டிச.5-ல் ரிலீஸாக இருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, தமிழ் டீஸரையும் வெளியிட்டுள்ளது.
அதில் பாலகிருஷ்ணா, “சவுண்டை கண்ட்ரோல்ல வச்சுக்கோ, எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்டுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது; உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது” என்று ஆவேசமாகப் பேசும் வசனம் வெளியாகி உள்ளது. இந்த டீஸர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

