எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித் துணி’ சிறுகதை, ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. இதில் கீதா கைலாசம் ‘அங்கம்மாளாக’ நடித்திருக்கிறார். சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இப்படம் பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம்.
உங்களோட ‘கோடித்துணி’ கதை எப்படி ‘அங்கம்மாள்’ ஆச்சு?
இந்தக் கதை ஆங்கிலம் மற்றும் மலையாளத்துல மொழி பெயர்ப்பாகி இருக்கிறது. இரண்டையும் வாசிச்சிருக்கார், இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். ‘இந்தக் கதையை படமா பண்ணப்போறேன், அனுமதி வேணும்’னு கேட்டார். இதுமாதிரி நிறைய பேர் கேட்பாங்க. ஆனா, ஒண்ணும் நடக்காது. இவரையும் அப்படித்தான்னு நினைச்சேன். பிறகு முறையா அனுமதி வாங்கினார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர்ங்கறதால, மலையாளத்துல எடுப்பார்னு நினைச்சேன். ஆனா, தமிழ்லயே எடுத்திட்டார்.
அந்தக் கதையில அம்மா கேரக்டருக்கு பெயரே இருக்காது. அம்மா, மகனுக்கான பிரச்சினை மட்டும்தான் கதை. அதுவும் குறைவாகத்தான் இருக்கும். திரைப்படத்துக்கு இன்னும் வேணுமே… நீங்க ஏதும் மாத்தி எழுதிக் கொடுத்தீங்களா?
என் கதையில அம்மா கேரக்டருக்கு பெயர் வைக்கல. படத்துக்காக ‘அங்கம்மாள்’னு வச்சிருக்காங்க. அப்புறம் ஒரு சிறுகதையை படமாக்கும்போது அதுக்கு நிறைய விஷயங்கள் சேர்க்கணும். சினிமாவுக்கு ஒரு குறுநாவல் அளவுக்காவது கதை வேணும். இந்தக் கதையில அவங்க சில விஷயங்களை மாற்றப் போறோம்னு சொன்னாங்க. கதையை கொடுத்துட்ட பிறகு அது அவங்க விருப்பம்தான். அதனால, அம்மா கதாபாத்திரத்தை விரிவாக்கி, அம்மா- மகனுக்கான உறவை இன்னும் ஆழமா சொல்லியிருக்காங்க. ஒரு காதலையும் சேர்த்திருக்காங்க. கதை களத்தை திருநெல்வேலி பக்கமா மாத்திட்டாங்க. நான் எழுதிய கொங்கு பகுதி விஷயங்கள், படத்துல திருநெல்வேலி பேச்சு வழக்குல வரும்.
உங்களோட ‘கூளமாதாரி’ நாவலும் திரைப்படமாகுதே…
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் இயக்கியிருக்கார். படப்பிடிப்பு முடிஞ்சிடுச்சு. எனக்கு ஆச்சரியம்தான். அந்த நாவல்ல அவ்வளவு ஆடுகள் வரும். களமே பெரிசு. அவ்வளவு நுட்பமான விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுகிட்டு இவரால எப்படி எடுக்க முடியும்னு எனக்கு தோணுச்சு. ஆனா, அவர் முதல்ல ‘பைலட்’ எடுத்துட்டு வந்து காண்பிச்சதும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. இவர் கண்டிப்பா பிரம்மாண்டமா இந்தப் படத்தை இயக்குவார்னு நம்பினேன். ஸ்கிரிப்ட் காண்பிச்சார். நல்லா எழுதியிருந்தார். சிறப்பான படமா இருக்கும்னு நினைக்கிறேன்.
எழுத்தாளர் பூமணி எப்பவோ எழுதிய ‘வெக்கை’, சில வருடங்கள் முன்னால, ‘அசுரன்’ ஆகியிருக்கு. உங்க ‘கோடித்துணி’ கூட 1997-ல வெளியான கதை. பழைய கதைகள், நாவல்களைத் தேடி பிடிச்சு சினிமாவாக்குற போக்கு இப்ப அதிகரிச்சிருக்கு…
ஆமா. தமிழ் சினிமாவுல இப்ப வரும் இளைஞர்கள், இலக்கியம் படிக்கிறவங்களா இருக்காங்க. அதனால தங்களுக்குப் பிடிச்ச கதையை சினிமாவாக்க ஆர்வம் காட்டுறாங்க. அதுமட்டுமில்லாம, இன்னைக்கு புதுசா படம் இயக்க நினைக்கிற இயக்குநர், ஹீரோக்கள்கிட்ட கால்ஷீட் வாங்குறது எளிதான விஷயமாகவும் இல்ல. அதனால தங்களை நிரூபிக்கறதுக்கு நல்ல கதைகளை படமாக்க நினைக்கிறாங்க. நாவல்களை, சிறுகதைகளை படமாக்க, குறைவான பட்ஜெட் போதுமானதா இருக்கறதால அதை தேடுறாங்கன்னு நினைக்கிறேன்.
உங்களோட சேத்துமான், கோடித்துணி சிறுகதைகளும், பூக்குழி, கூளமாதாரி நாவல்களும் படமாகியிருக்கு… அடுத்து?
‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ், ‘பூக்குழி’ நாவலை படமாக்கி இருக்கார். தர்ஷன், தர்ஷணா நடிச்சிருக்காங்க. படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. எந்தப் படைப்பை எழுதும்போதும்அது சினிமாவாகும்னு நினைச்சு எழுதறதில்லை. எழுதிய பிறகுதான் அப்படி கேட்டு வந்திருக்காங்க. என் முதல் நாவலான ‘ஏறுவெயில்’ வந்ததும் அதைப் படிச்சுட்டு 1992-ல்பாலுமகேந்திரா கூப்பிட்டு படமா பண்ணப் போறேன்னு பேசினார். அப்புறம் பண்ணல. புதுசா வர்றவங்க நிறைய பேர், என் கதைகளை படிச்சுட்டு படம் பண்ண கேட்கிறாங்க.
சமீபகால திரைப்படங்களை கவனிக்கிறீங்களா?
அப்பப்ப பார்ப்பேன். நல்ல படங்களும் வந்துட்டுதானே இருக்குது. திரைப்படங்கள்ல அதிக வன்முறைகள் பற்றி கேட்கிறாங்க. ஹீரோயிச மாஸ் படங்கள்னாலே வன்முறைகள்தானே இருக்கு. அதை எப்படி மக்கள் ரசிக்கிறாங்கன்னு எனக்குத் தெரியல. தமிழ் சினிமாவுல என்ன ட்ரெண்ட் வந்தாலும் வன்முறை டிரெண்ட் மாறவே இல்லை. அது தொடர்ந்துகிட்டுதான் இருக்கு. இதுக்கு மத்தியில நல்ல படங்களும் வருவது மாற்றம்தான். மலையாளத்துல அவங்க கலாச்சாரம் சார்ந்து நிறைய படங்கள் வருது. தமிழ்ல நம் கலாச்சாரம் சார்ந்த படங்கள் அதிகம் இல்லை. அது வரணும். தமிழ் இலக்கியம் சார்ந்து நம் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்னு நானிலங்களா பிரிக்கிறோம். ஆனா, அந்த நில அமைப்பு திரைப்படங்கள்ல காண்பிக்கப்படலை. அந்த வாழ்வியல், சினிமாவுல சிறப்பா சொல்லப்படலை. ‘கூளமாதாரி’ முல்லை நிலம் சார்ந்த கதை. மேய்ச்சல் நிலம் சார்ந்த கதை. இதுபோல அந்தந்த நிலம் சார்ந்த கதைகள் வரும்போது அதை ரசிக்கவும் மக்கள் தயாரா இருக்காங்க.

