அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மம்தா மோகன்தாஸ் படம் பற்றி கூறியதாவது: இது அக்கா – தம்பி கதையைக் கொண்ட படம். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. ஆணாதிக்க சிந்தனை கொண்ட தம்பிக்கும், பெண்ணியம் பேசும் அக்காவுக்கும் சிறு வயதிலிருந்தே ஈகோ இருக்கிறது. எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அது, ஒரு கட்டத்தில் இருவரையும் எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பது படம்.
திரைக்கதையை இயக்குநர் அருமையாக அமைத்திருக்கிறார். திருநெல்வேலி பின்னணியில் நடக்கும் கதை. படத்துக்காகத் திருநெல்வேலி வழக்கில் பேசப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். முன்னதாக ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பயிற்சி இருந்தது. படப்பிடிப்பின் போது அப்பயிற்சி அதிகம் உதவியது. நானே டப்பிங் பேசியிருக்கிறேன். கதைப்படி, சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, டக்கர் வண்டி ஓட்டும் பெண்ணாக நடிக்கிறேன்.
சினிமாவில் இது எனக்கு 20-வது வருடம். வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் அதிகம் கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.