திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் கோரிக்கை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் வருடாந்திரப் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளர் டி.சிவா, பொருளாளர் தனஞ்செயன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதில், “தமிழ்நாட்டில் 1,150 திரையரங்கங்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் வெளிப்படைத் தன்மைக் கொண்டு வர ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் பாக்ஸ் ஆபிஸ் கண்காணிப்பு மென்பொருள் அமைப்பு (Centralized, Online Box Office Tracking Software System) வேண்டுமென்று நமது சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு வர தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளஸ் உரிமையாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு தருமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் புக் மை ஷோ, ஸோமோட்டோ டிஸ்ட்ரிக்ட் போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமாக ஷேர் தரப்பட வேண்டும்.
தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளம் (பெப்சி) தொடங்கியுள்ள பெஸ்ரா அமைப்பின் மூலம், ஸ்வைப் கார்டு உதவியுடன் தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்து அதன்படி அவர்களுக்கு வாராவாரம் சம்பளம் வழங்கும் முறைக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்துள்ளனர் என்பது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

