‘துருவ நட்சத்திரம்’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சித்தும் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’, பேச்சுவார்த்தை நடத்தி வெளியானாது. அப்படம் அமோக வெற்றியடைந்தது.
அந்த வரிசையில் அடுத்ததாக ‘துருவ நட்சத்திரம்’ படம்தான் என்று திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தார்கள். இதனிடையே, மே 1-ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. கேரளா விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து மே 1-ம் தேதி வெளியீடு என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு கண்டிப்பாக வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியானால், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக வெளியாகும். ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் சூர்யாதான். அப்போது கவுதம் மேனனுடன் ஏற்பட்ட மனகசப்பில் தான் அப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.