ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரிப்பில் “தேசியத் தலைவர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ‘தேவர்’ ஆராய்ச்சியாளர் நவமணி கலந்துகொண்டார். திரைக்கதை உருவாக்கத்தில் தொடங்கி படப்பிடிப்புவரை படக்குழுவுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். இவரின் வழிகாட்டுதலின்படி பலர் தேவர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதி முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

இவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “2022-ல் என்னை இந்தப் படத்துக்காக அழைத்தார்கள். அப்போதே சிலர், இந்தப் படக்குழு சரியானது அல்ல. அவர்களுடன் சேராதீர்கள் என்றார்கள்.
நானே, அவர்கள் என்ன கதையை எடுத்து வைத்திருக்கிறார்கள் எனப் பார்ப்போம் என்றே வந்தேன். நான் இந்தப் படத்துக்கு வருவதற்கு முன்னால் இருந்த திரைக்கதையே வேறு.
அதை மாற்ற வேண்டும் என ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே வந்தேன். ஒருகட்டத்தில் அவர்களால் என்னை ஜீரணிக்கவே முடியவில்லை.