இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்து மக்கள் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பைசன்’. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி என்ற கிராமத்தை சேர்ந்த பி.கணேசன் (55) என்பவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.
பிரபல கபடி வீரரான மணத்தி பி.கணேசன் 1994-ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, 1995-ல் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருதை பெற்றுள்ளார். கபடி விளையாட்டுக்காக மணத்தி கணேசன் சந்தித்த சவால்கள், இன்னல்கள், அவரது வெற்றிப் பயணங்களை தனது திரை மொழியில் காட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இந்தப் படம் கபடி விளையாட்டுக்கு புத்துயிர் ஊட்டியிருப்பதாக பெருமைப்படுகிறார் மணத்தி கணேசன். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் மணத்தி கணேசன் சில அனுபவங்களைப் பகிர்ந்தார். “நான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், எனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை முழுமையாக படத்தில் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். எனது அனுமதியை பெற்றுதான் எனது வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு தொடங்கியதில் இருந்து முடியும் வரை 2 ஆண்டுகளாக அவருடன் இருந்து பணியாற்றியுள்ளேன். கதாநாயகன் துருவ் மற்றும் கலைஞர்களுக்கு கபடி குறித்து தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வந்துள்ளேன். இந்தப் படத்தை திரையில் பார்த்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கபடி வீரரை மட்டுமல்லை, ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களையும் பெருமைபடுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.
1994-ல் ஆசிய போட்டியில் தங்க வென்றபோது மற்றும் 1995-ல் அர்ஜூனா விருது பெற்றபோதும் கூட இப்படி இருந்ததில்லை. அதைவிட இப்போது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்” என்று நெகிழ்ச்சியாக விவரிக்கிறார் மணத்தி கணேசன்.
மேலும் அவர் கூறும்போது, “கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு மூலம் சாதிக்க முடியும் என்பதை மாரி செல்வராஜ் தனது பாணியில் சிறப்பாக சொல்லியிருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு தேவையான ஒரு படமாகவே இதைப் பார்க்கிறேன்.
கபடி வீரர்கள் மட்டுமல்ல, ஹாக்கி வீரர்கள், தடகள வீரர்கள் என விளையாட்டு துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் இவை. கபடி விளையாட்டுதான் எனது வாழ்க்கை. சிறு வயதிலேயே கபடி விளையாட தொடங்கிய நான் தற்போது வரை அந்த விளையாட்டு உடனேயே எனது வாழ்க்கை பயணத்தை தொடருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல பதக்கங்கள், கோப்பைகளை வென்றிருக்கிறேன். கபடி மீதான எனது தீராத காதலே 1995-ல் எனக்கு அர்ஜூனா விருதை பெற்றுத் தந்தது.
தமிழக அணியில் வீரராக, பயிற்சியாளராக இருந்துள்ளேன். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வெற்றிகளை குவித்துள்ளேன். தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் திருநெல்வேலியில் விளையாட்டு அலுவலராக பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து பல்வேறு கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறேன். தூத்துக்குடி மாவட்ட கபடி அணிக்கு பயிற்சியாளராக இருந்து இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பையை வென்றுள்ளோம். இவ்வாறு கபடியுடனான எனது பயணம் தொடர்கிறது.
எனது இந்த பயணத்தின் ஒரு மைல்கல் தான் ‘பைசன்’ திரைப்படம். எனக்கு புதியதொரு அடையாளத்தை தந்திருக்கிறது. இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும். இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று நெகிழ்கிறார் மணத்தி கணேசன்.
சாதிய ஒடுக்குமுறைகளை கடந்து ஒரு விளையாட்டு வீரன் எப்படி உலக அளவில் முன்னேறி சாதித்தான் என்ற கதையை ஒரு நல்ல சினிமாவாக கொடுத்து ‘பைசன்’ மூலம் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் மாரி செல்வராஜ். முதல் நாளில் புக் மை ஷோ தளத்தில் 59 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்ட நிலையில், மெல்ல படிப்படியாக அதிகரித்து, அடுத்தடுத்த நாட்களில் லட்சங்களில் விற்பனையாகி அரங்குகள் நிறைந்து கவனிக்கத்தக்க வெற்றியை உறுதி செய்தது.
இதனிடையே, ‘பைசன் காளமாடன்’ தனது கரியரில் மிக முக்கியமான படம் என்று குறிப்பிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பகிர்ந்த சில விஷயங்களும் இங்கே கவனிக்கத்தக்கது.
“என்னை பாதித்த கதை, அப்பாவின் கதை, தாத்தாவின் கதை உள்ளிட்டவற்றை சாகும் வரை சொல்வேன். ஒரு கதையை யோசிக்கும்போதே என் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டுதான் யோசிக்கிறேன். மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவன், ஏனென்றால் மாரி செல்வராஜ் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள். தமிழ் சினிமாவில் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது. மாரி செல்வராஜ் இங்கிருந்து கிளம்பி சென்றதற்கான வலியும் வேதனையும் தெரியும். அதனை மறந்துவிட்டு சாதாரணமாக பாடு, ஆடு என்றால் என்னால் முடியாது. நான் தொடர்ந்து சாதியை எதிர்ப்பேன்.
இதுவரை எடுத்த 5 படங்களையும் பார்த்து என்னை அரசாங்கம் பாராட்டியிருக்கிறது, விருதுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ் சமூகம் என்னை கொண்டாடி வருகிறது. ஒட்டுமொத்த சமூகத்திற்குள் இருக்கும் சாதியை மாற்றவேண்டும் என்பதற்காகவே வேதனையுடன் படங்கள் எடுக்கிறோம். அதற்கு எதிராக சில பேர் பேசத்தான் செய்வார்கள். அதையும் மாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளியாக அழுத்தம் இல்லை… ஆனால் பொறுப்பு இருக்கிறது. ஒரு விஷயம் சொன்னால் அதனை நம்புகிறார்கள். எனது சினிமாவை ரொம்ப உன்னிப்பாக பார்ப்பதால், அந்த பொறுப்பு என்னிடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் மாரி செல்வராஜ்