மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
“திரைக்கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் திரு. ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
“பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான திரு. ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”.