விஜயகாந்த் நடித்த “பரதன்’, பிரபுதேவா நடித்த ‘வி.ஐ.பி.’ லிவிங்ஸ்டனுக்கு ஹீரோவாக திருப்பு முனை ஏற்படுத்திய ‘சுந்தரபுருஷன்’ உள்படப் பல படங்களை இயக்கிய எஸ்.டி. சபா, உடல் நலன் பாதிப்பினால் நேற்று (டிசம்பர் 26) காலமானார். ஏ.வி.எம். நிறுவனத்தில் அவர் இயக்கிய ‘அ.ஆ.இ.ஈ’ மற்றும் ‘பதினாறு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்தாஸ். இப்போது வில்லன், குணச்சித்திர நடிகராகவும் பிஸியாக இருந்து வருகிறார். மறைந்த சபாவின் நினைவுகள் குறித்து இங்கே கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
”அவர் ஒரு பெரும் கலைஞன். நான் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த காலத்திலிருந்து சபா சாரை தெரியும். நல்லா பழகுவார். விஜயகாந்த் சாரை வைத்து அவர் இயக்கிய ‘பரதன்’ எனக்கு ரொம்ப பிடித்த படம். அந்த சமயத்தில் அவர் படங்களுக்கு ஒரு சின்ன இடைவேளை விட்டு, சின்னத்திரையில் பிஸியானார். ‘காலேஜ் ரோடு’, ‘சிகரம்’ என டி.வி. தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார். அதில் நான் உதவி ஒளிப்பதிவாளராகவும் இரண்டவது யூனிட் கேமராமேனாகவும் வேலை செய்திருக்கிறேன். அதன் பிறகு அவர் சினிமா பண்ணும் போது அவ்வப்போது கேமரா பண்ணக் கூப்பிடுவார். அவரிடம் நண்பராகப் பழகும் வாய்ப்பு அமைந்தது.
அவரிடம் உதவி இயக்குநராக இருந்தால் சீக்கிரமே டைரக்ஷனை கற்று விடலாம். சினிமாவில் கதை விவாதம் தொடங்கி, படப்பிடிப்பு, எடிட்டிங், கிராபிக்ஸ், இசைக்கோர்ப்பு, அனிமேஷன் என அத்தனை வேலைகளையும் அவரிடம் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் வேலை செய்தால் கூட கற்றுக்கொள்ள முடியும். எல்லோருக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார். கதை விவாதத்தின் போது ‘இந்த சீன் சரியில்லை’ என்று அவரது அசிஸ்டென்ட்கள் சொன்னால், முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்.