சென்னை: “குறைவான பட்ஜெட்டில் செய்ததால், ஒரு பேப்பர் போஸ்டரில் மட்டுமே விஜய் பற்றி அப்படி வைத்தேன். பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன்” என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் தெரிவித்தார்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் அறியான்’. இப்படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லரில் ஒருகாட்சியில் செய்தித்தாள் போஸ்டர் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் “தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என்ற வாசகங்கள் இடம்பெற்றன. இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கோபி பேசும்போது, “விஜய் தொடர்பாக அப்படி ஒரு காட்சியை எதற்காக வைத்தீர்கள் என்று பலரும் கேட்டார்கள், நிறைய மீம்ஸ் கூட வந்தன. அந்த காட்சிகள் படத்தில் இருக்காது, நீக்கி விடுவார்கள் என்று சொன்னார்கள். நீங்கள் ட்ரெய்லரில் என்னவெல்லாம் பார்த்தீர்களோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க வாருங்கள்.
இந்த படத்தை குறைவான பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் மட்டுமே விஜய் பற்றி அப்படி வைத்தேன். பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன். பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் ரெஃபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களிலும் இருக்கும்” என்றார்.