மும்பை: “பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன்” என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் மும்பையை விட்டு வெளியேறிவிட்டேன். பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். அனைவரும் நம்பத்தகாத இலக்குகளைத் துரத்துகிறார்கள். ரூ.500 அல்லது ரூ.800 கோடி படங்களை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். படைப்புச் சூழல் என்றும் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.
ஒரு நகரம் என்பது வெறும் கட்டமைப்பு மட்டுமல்ல, அதன் மக்களும் கூட. இங்குள்ள மக்கள் நம்மை கீழே இழுக்கிறார்கள். தென்னிந்திய இயக்குநர்களை கண்டு பொறாமைப்படுகிறேன். காரணம் இப்போது, என்னால் எதையும் பரிசோதனை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் வெறும் லாபத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். படம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதை எப்படி விற்கலாம் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. சினிமா தயாரிப்பின் மகிழ்ச்சி உறிஞ்சப்பட்டுவிட்டது” இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.