மலையாளத்தில் ஹிட்டடித்த ‘மார்கோ’ படத்தின் இயக்குநர் ஹனிஃப் அதேனி அடுத்ததாக இந்திப் படம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. இதன் இயக்குநர் ஹனிஃப் அதேனியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் – ஹனிஃப் அதேனி இணையும் படத்தின் நாயகன் யார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ‘மார்கோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் இந்த வாய்ப்பு ஹனிஃப் அதேனிக்கு சாத்தியமாகி இருக்கிறது.
2024-ம் ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மார்கோ’. இப்படத்தில் உன்னி முகுந்தன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் சில தரப்பினர் இப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், இந்த அதிரடியான ஆக்ஷன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இப்படம், பிப்ரவரி 14-ல் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.