பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஷாஜி கருண் காலமானார். அவருக்கு வயது 73.
1989ஆம் ஆண்டு வெளியான ‘பிறவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஷாஜி கருண். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டது. இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளையும் வென்றது. 2011ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஷாஜி கருண் மலையாள சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்த புகழ்பெற்ற கலைஞர் ஆவார். சுமார் 40 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ‘பிறவி’, ‘ஸ்வாஹம்’, ‘வனபிரஸ்தம்’, ‘நிஷாத்’, ‘குட்டி ஸ்ராங்கு’ மற்றும் ‘ஸ்வாபானம்’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷாஜி கருண் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.