பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைந்துள்ள படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
தற்போது பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.
’ஃபெளசி’ படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக இமன்வி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜீ, இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்களால மொழியிலும் வெளியாக இருக்கிறது.

