தமிழ் சினிமா இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. குறிப்பாக, ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தற்போது திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
அதற்கேற்ப படங்களின் கன்டென்ட்களும் மெருகேறியிருக்கிறது. இப்படியான ஒரு புதுமையான பாய்ச்சலை 2010-க்குப் பிறகு வந்த பல இளம் இயக்குநர்களும் நிகழ்த்திக்காட்டினார்கள்.
இதற்கு “நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகச் சொல்லலாம். கடந்த வாரம் சசிகுமார் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. 25 வயதான அபிஷன் ஜீவிந்த் என்ற இளம் இயக்குநர் அன்பை போதிக்கும் அப்படைப்பை எடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அபிஷன் ஜீவிந்தை போல ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதில் பல இளம் இயக்குநர்கள் காரணமானவராக இருந்திருக்கிறார்கள்.
2010-க்கு முன்பு கோலிவுட்டிலிருந்து வந்த பல திரைப்படங்களும் பல மைல்கல்லை தொட்டு அடுத்தடுத்த மேடைகளுக்கும் ஏறியிருக்கிறது.
2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவில் அப்போது வரை பின்பற்றப்பட்டு வந்த பல விஷயங்களில் புதுமையை பல இளம் இயக்குநர்களும் புகுத்தினார்கள். கதை சொல்லல், திரைக்கதையம்சம், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை அறிமுகப்படுத்தினார்கள்.
இப்படி புதுமையைக் காட்டி ஆச்சரியப்படுத்திய பலரும் மற்றுமொரு முக்கியமான விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஆம், நடிகர்களை மட்டுமே வைத்து பெரும்பான்மையாக அடையாளப்படுத்தப்பட்ட சினிமாவில் இந்த இளம் இயக்குநர்கள் தங்களை முன்னிறுத்தி ஒரு திரைப்படத்தின் அடையாள முகமாக உருவெடுத்தார்கள்.
இப்படி 2010-க்குப் பிறகு அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் தனித்துவமான படைப்புகளையும் இங்கே பார்க்கலாம்.