அஜித்தின் ‘விடாமுயற்சி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு தாமதம் ஆவதால், இதர படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகின்றன.
ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட படம் அஜித்தின் ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது.
இதன் உரிமையை வாங்குவதில் படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்க முடியாமல் படக்குழு காத்திருக்கிறது. இதன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது.
மேலும், மகிழ் திருமேனியின் அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டபோது பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டது லைகா நிறுவனம். அதற்கு பின்பு வெளியான பாடல் மற்றும் அதனை விளம்பரப்படுத்த வெளியிட்ட வீடியோ பதிவுகள், எக்ஸ் பதிவுகள் என அனைத்திலுமே பொங்கல் வெளியீட்டை எடுத்துவிட்டது. இந்தப் பிரச்சினையை முன்வைத்தே தூக்கிவிட்டதாக தெரிகிறது.
‘விடாமுயற்சி’ படக்குழுவினரின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்காத காரணத்தினால், விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் மீண்டும் வெளியீட்டுக் குழப்பம் தொடங்கிவிட்டது.
தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் சின்ன படங்கள் அனைத்தையும் பொங்கலுக்கு வெளியிட்டுவிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கிவிட்டார்கள். சிபிராஜ் நடித்துள்ள படம், ‘தருணம்’ உள்ளிட்ட பல படங்கள் தங்களுடைய படங்களுக்கான விநியோகஸ்தர்கள் யார் என்ற பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டார்கள்.
பொங்கல் விடுமுறைக்கு ‘விடாமுயற்சி’ படத்தை வெளியிடுவோமா, இல்லையா என்று லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காத வரை இந்தக் குழப்பத்துக்கு தீர்வு வரப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.