ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தின் தலைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
இப்படத்துக்கான அறிமுக டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘ப்ரோகோட்’ என்ற பெயரில் மதுபானங்களை தயாரிக்கும் டெல்லியைச் சேர்ந்த இந்தோ -ஸ்பிரிட் என்ற நிறுவனம் இந்த தலைப்பை ரவிமோகன் ஸ்டுடியோஸ் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில் “நாங்கள் 2015 முதல் ‘ப்ரோ கோட்’ என்ற பெயரில் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இது தற்போது நுகர்வோர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற ஒரு ப்ராண்டாகும். அதே பெயரை திரைப்பட தலைப்பாகப் பயன்படுத்துவது விதிமீறலாகும். இது ப்ராண்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் காரியா, “ஒரே வர்த்தக முத்திரை மற்றும் பெயர் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டால் நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது விதிமீறலாகத் தெரிகிறது” என்று கூறி ரவிமோகன் ஸ்டுடியோஸ் இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்தோ ஸ்பிரிட் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக ரவிமோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் ரவிமோகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவிமோகன் தரப்பு, ‘ப்ரோகோட்’ படத்தில் தங்களுடைய மதுபானத்தை ப்ரோமோட் செய்யுமாறு இந்தோ ஸ்பிரிட் நிறுவனம் தங்களை அணுகியதாகவும், ஆனால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் ரவிமோகன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். அந்த மதுபான நிறுவனம் தமிழ்நாட்டில் தங்கள் கிளையை தொடங்க இருப்பதால் அதற்கு விளம்பரம் தேடும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் ரவிமோகன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

