சென்னை: விரைவில் ஷாருக் கான், ஆமிர் கான் போன்ற நடிகர்களை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று நான் நம்புகிறேன் என இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராம் கூறியதாவது: “மாரி செல்வராஜின் வெற்றி என்பது எங்கள் குழுவின் வெற்றி, எங்கள் வீட்டின் வெற்றி. இந்த வெற்றி போதாது என்றுதான் நான் சொல்வேன். ஒரு பான் இந்தியா இயக்குநராக மாறுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு உண்டு. எனக்கு தெரிந்து பாரதிராஜாவுக்கு பிறகு மிக வேகமாக படம் எடுக்கக் கூடிய இயக்குநர் மாரி செல்வராஜ். படத்துக்குப் படம் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். ’பரியேறும் பெருமாள்’ படத்தை விட ஒரு திரைப்படமாக ‘வாழை’ எனக்கு பிடித்தது. இப்போது ‘வாழை’யை விட ‘பைசன்’ ஒரு படமாகவும், உள்ளடக்கமாகவும், சிக்கலான உணர்வுகளை காட்டிய விதத்திலும் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
இன்னும் பெரிய இடங்களுக்கு அவர் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விரைவில் இந்தியில் ஒரு பான் இந்தியா படம் அவர் எடுப்பார் என்று நம்புகிறேன். அவர் ஷாருக்கான், ஆமிர் கானுடன் படம் பண்ணவேண்டும். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு நான் போய் ஷாருக் கானுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. காரணம் நான் ஷாருக் கானின் தீவிர ரசிகன்” இவ்வாறு ராம் தெரிவித்தார்.
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.
ஜுலை 4-ல் வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ராம் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.