நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார்.
கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

ஃபெராரி, லம்போகினி, போர்ஷே, பி.எம்.டபள்.யூ ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டிப்பார்த்த அஜித், போர்ஷேவில் 911 GT3 RS எனும் ஸ்போர்ட்ஸ் காரை தேர்வு செய்து, கடந்த எல்லா ரேஸிலும் பயன்படுத்தி வந்தார்.
அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans Series) தொடரில் களமிறங்க, இப்போது புதிய ரேஸ் கார் ஒன்றை தயார் செய்து வருகிறார் அஜித். இந்த லீ மான்ஸ் தொடர் கொஞ்சம் வேறுபட்டது. இதில் LMP2, LMP3, GT3 வகை கார்கள்தான் பங்கேற்கின்றன.