பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடுத்து வரும் படம், ‘சுயம்பு’. இதில் அவர், போர் வீரனாக வருகிறார். சம்யுக்தா மேனன், நபா நடேஷ் நாயகிகளாக நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன் மற்றும் கர் தயாரிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
இது, ஒரு மில்லினியத்துக்கு முந்தைய கதை என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் சில வரலாற்று நாயகர்களைப் மையப்படுத்தி உருவாகிறது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கற்பனை கதையான இப்படம் தாமதமாகி வருவதாகக் கடந்த சில நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு “மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை அவசியம்” என்று நிகில் சித்தார்த்தா பதில் அளித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “என் வாழ்க்கை பயணத்தில் மிகவும் சுவாரஸ்யமும் கற்றுக்கொள்ளக் கூடியதுமான திரைப்படம் இது. அற்புதமான ஒன்று உருவாகிக் கொண்டிருக்கும்போது பொறுமை முக்கியம் என்பதை இப்படம் எனக்கு கற்றுக் கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார். இது அவருக்கு 20 வது திரைப்படம்.

