மீனம்: குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாத நீங்கள், கள்ளம் கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். இதுவரை 3-ல் இருந்தபடி பல விஷயங் களையும் முடக்கி வைத்திருந்தார் குருபகவான். இப்போது அவர், நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைகளிலும் புதிய தொடர்புகளும், அவற்றால் ஆதாயங்களும் உண்டாகும். சில சவால்களை போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குள் அவ்வப்போது இனம் புரியாத வெறுமை வந்து போகும்.
சில நேரங்களில் வாழ்வில் சலிப்பு ஏற்படலாம். செலவுகளும் தொடர்ந்து வரும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சேமிப்புகள் கரையும். நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நல்லவராக நடந்து கொண்டால் போதும். மற்றவர்கள் உங்களைப் பாராட்ட வேண்டுமென நினைக்காதீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீடு – மனை வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லா வகையி லும் செல்வாக்கு அதிகரிக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 12-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தன, பாக்யாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணம் செய்வதால் எல்லா வகையிலும் வெற்றி உண்டு. உங்க வார்த்தைக்கு மரியாதை கூடும். அதிகார பதவியில் உட்காருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. ஞாபக மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
உங்களுடைய ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் இருக்கும். ஆளும் திறமை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அழகு, அறிவு கூடும். புது வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பதவி முன்னேற்றம் காண்பீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாளுங்கள். புதிய வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். கெமிக்கல், பர்னீச்சர் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள். அவர்களையும் அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. எனினும் விரைவில் உங்களுக்குச் சாதகமான நிலையே உருவாகும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கணினித்துறையினருக்கு வேறு நல்ல நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி பயிலும் முயற்சியிலும் இறங்கவும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது. கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிலும் வெற்றி காண்பீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி, தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தேனி மாவட்டம் குச்சனூரில் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் அருள்பாலிக்கும் குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள். எதிலும் வெற்றியுண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |