ஏஐ மூலம் காட்சிகள் மாற்றப்பட்டு இருப்பதற்கு ’ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த் எல்.ராய் காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது.
தற்போது இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது இயக்குநர் ஆனந்த்.எல்.ராயை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “கடந்த மூன்று வாரங்கள் நம்பமுடியாத நாட்களாகவும், மனதை மிகவும் புண்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தன. ’ராஞ்சனா’, அக்கறை, மோதல், கூட்டுழைப்பு மற்றும் வெற்றி பெறுமா இல்லையா என்று தெரியாத கலை படைப்புகளுக்கே உண்டான ஆபத்து ஆகியவற்றால் உருவான ஒரு திரைப்படம். அது, எனக்குத் தெரியாமல், ஒப்புதல் இல்லாமல் மாற்றப்பட்டு, மீண்டும் தொகுக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டதைப் பார்ப்பது மனதை நொறுக்குவதாக இருந்தது. இவ்வளவு எளிதாக, சாதாரணமாக இதைச் செய்த விதம் தான் இந்த விஷயத்தை இன்னும் மோசமானதாக்குகிறது.
பிணைப்பு, தைரியம், உண்மை ஆகிய மூன்றும் தான் ’ராஞ்சனா’ என்கிற என் படைப்பின் ஆதார நோக்கங்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் துறையைச் சேர்ந்தவர்கள், என் ரசிகர்கள் மற்றும் படைப்பாற்றலுக்காக நிற்கும் சமூகமும் எனக்கு ஆதரவு கொடுத்து, தோள் கொடுத்து நின்றது, அந்த ஆதார நோக்கங்களை நினைவூட்டவதாக இருந்தது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சரி, மிகத் தெளிவாக ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்.
நான் AI- கொண்டு மாற்றப்பட்ட ’ராஞ்சனா’வின் புதிய பதிப்பை எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை. என்னால் அங்கீகரிக்கப்படாத வடிவம் இது. இதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் படத்தை உருவாக்கிய குழுவிற்கும் இல்லை. இதன் நோக்கம் என்னவாக இருந்தாலும் இது நாங்கள் உத்தேசித்த அல்லது உருவாக்கிய திரைப்படம் இல்லை.
இது எங்களுக்கு வெறும் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. இது மனிதர்களின் கைகளால், குறைகளால், உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. இப்போது வெளியாகியிருப்பது எங்கள் படைப்பைப் போற்றும் காணிக்கை அல்ல. இது படைப்பின் நோக்கத்தையும், பின்னணியையும், ஆன்மாவையும் அழிக்கும் ஒரு பொறுப்பற்ற செயல். எங்கள் படைப்பை ஒரு இயந்திரத்திடம் கொடுத்து, அது மாற்றப்பட்டு, பின்னர் புதுமையின் சின்னமாக அதை அலங்கரிப்பது முற்றிலும் மரியாதையற்ற செயலாகும்.
ஒப்புதல் இல்லாமல், ஒரு திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மரபை மறைத்து அதன் மேல் செயற்கையாக ஆடை உடுத்துவது படைப்பாற்றல் ஆகிவிடாது. இது நாங்கள் உருவாக்கிய எல்லாவற்றுக்கும் செய்யும் துரோகம். இந்தப் படத்துக்கு உயிர் கொடுக்க உதவிய அனைவரின் சார்பாகத்தான் நான் பேசுகிறேன். கதாசிரியர், நடிகர்கள், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், படத்தொகுப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பெரிய குழவிற்காக. எங்களில் யாரும் கலந்தாலோசிக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகளை கேட்டுக் கொள்ளவும் இல்லை.
எங்களைப் போலவே உங்களுக்கும் ராஞ்சனா திரைப்படம் ஏதோ ஒரு விதத்தில் அர்த்தமுள்ளதாக இருக்குமானால் இந்த AI-மாற்றப்பட்ட பதிப்பு எங்களின் எண்ணங்களை, நாங்கள் யார் என்பதை பிரதிபலிக்கவில்லை என்பதைத் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும், நாங்கள் உருவாக்கிய படத்தின் ஆன்மாவையும் இது கொண்டிருக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.